search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி"

    பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சை பழைய பஸ்நிலையம் முதல் திலகர் திடல் வரை இன்று காலை நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி, சுகாதாரத்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் சார்பில் பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சை பழைய பஸ்நிலையம் முதல் திலகர் திடல் வரை இன்று காலை நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலைவகித்தார். அமைச்சர் துரைக்கண்ணு சிறப்புரை ஆற்றினார்.

    பேரணியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பகுதி செயலாளர்கள் அறிவுடை நம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியேற்பு நடைபெற்றது.

    பேரணியையொட்டி பிளாஸ்டிக் உறைகளில் வைக்கப்பட்ட உணவுப்பொருட்களை வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குடிநீரை பருகுவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் வண்ண கொடிகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் விரிப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட 8 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் திரட்டப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 2 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தியும், துண்டு பிரசுரம் வழங்கியும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×